மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் -அ.தி.மு.க.வினர் வரவேற்பு
மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கையில் நேற்று நடந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டார். அதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களுமான ராஜன் செல்லப்பா, செந்தில்நாதன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி, கார் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் வந்தார். அங்கு அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு, மல்லிகை மாலை மற்றும் இரட்டை இலையுடன் கூடிய செங்கோலை செல்லூர் ராஜூ வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்று எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் அவர், மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள ஓட்டலுக்கு வந்து மதிய உணவு அருந்தினார். தொடர்ந்து திருப்பத்தூர் வழியாக சிவகங்கை புறப்பட்டு சென்றார்.