எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் -டி.டி.வி.தினகரன் பேட்டி
பொதுக்குழு முடிவின்படி 4 மாதங்களில் தேர்தல் நடத்தாததால் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
தஞ்சாவூர்,
அண்ணா சொன்ன வார்த்தைபடி தலையில்லா முண்டமாக அ.தி.மு.க. உள்ளது. அது தான் உண்மை.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் 2 பேரும் தான் கட்சிக்கு தலைமை என தேர்தல் ஆணையம் நியமித்து இருந்தது. அவர்கள்தான் தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும். அதை எடப்பாடி பழனிசாமி மட்டும் செய்துவிட முடியாது.
சட்டப்படி தவறாகும்
அதனால்தான் அ.தி.மு.க. செயல்படாத இயக்கமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் 4 மாதங்களில் கட்சி தேர்தல் நடத்துவதாக சொல்லி இருந்தனர். அந்த தேர்தலை நடத்த முடியவில்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்று சொல்வது சட்டப்படி தவறாகும்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார் என்பதை அங்குள்ள தொண்டர்கள் உணர்ந்து வருகின்றனர். இன்றைய சூழலில் இரட்டை இலை செயல்படாமல் இருக்கிறது.
சுயநலம்
கூடவே இருந்து ஆட்சியை காப்பாற்றிய ஓ.பன்னீர்செல்வத்தை கூட எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி உள்ளார். தற்போது வேறு வழியின்றி கட்சிக்காக ஓ.பன்னீர்செல்வம் போராடி கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.வின் எதிர்காலமே நீதிமன்றத்தின் கையில் இருப்பது போல் செய்தது எடப்பாடி பழனிசாமிதான்.
தன் மீது தி.மு.க. வழக்குகள் போட்டுவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி செயல்படுகிறார். அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவது தி.மு.க. விற்குதான் லாபமாக அமையும். எல்லோருக்கும் துரோகம் செய்து சுயநலத்தின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால் அ.தி.மு.க.விற்கும், தமிழகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
நான் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பேன் என கூறிய நிலையில் அது தானாகவே நடந்து விடும். அ.தி.மு.க.விற்காகவும், சின்னத்திற்காகவும் அங்கே இருக்கும் தொண்டர்கள் விழித்து கொள்ளும் காலம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.