தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த இரண்டு ஆண்டுகால திறமையற்ற, கையாலாகாத விடியா திமுக அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்று மக்களை திசை திருப்பும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, விவசாயம் தொடர்பான தொழில்களைக் காக்க எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்காது வேளாண் பெருமக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக, தென்னை விவசாயிகள் விடியா திமுக ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின் சாபக்கேடாகும்.
தமிழகத்தில் பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேனி, நத்தம், உடுமலைப்பேட்டை போன்ற 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் தென்னை விவசாயம்தான் பிரதான தொழிலாகும். சுமார் 15 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் விவசாயிகள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இதுதவிர இளநீர் விற்பது, தேங்காய் நார் உற்பத்தி, நாற்கயிறு, பித்கட்டி, தேங்காய் நாரில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட உபதொழில்களில் சுமார் 15 லட்சம் பேர் மறைமுகமாகவும் தென்னையை நம்பி உள்ளனர். தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னைதான் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.
2021-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது, 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த திமுக, பதவியேற்று 27 மாதங்களாகியும் மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்கக்கூடிய பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகளில் 62 முதல் 66 வரை தென்னையைப் பற்றியதாகும். குறிப்பாக,
வாக்குறுதி எண். 65:-
பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல மையமும், ஒருங்கிணைந்த தென்னைப் பொருள்கள் உற்பத்தி வளாகமும் அமைத்துத் தரப்படும். சேலம், பேராவூரணி, பட்டுக்கோட்டை போன்ற தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கயிறு சார்ந்த பல்வேறு பொருட்கள் சிறு மற்றும் குடிசைத் தொழிலாகவும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமும் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் தமிழக அரசுக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய உதவி செய்யப்படும்.
வாக்குறுதி எண். 66:-
கொப்பரைத் தேங்காயை தமிழ் நாடு தென்னை நல வாரியத்தின் மூலம் அரசே கொள்முதல் செய்யும். கொள்முதல் விலையையும் அரசே நிர்ணயம் செய்யும். மேலும், தேங்காய் எண்ணெய்யை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வாக்குறுதிகளை, இந்த நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் நிறைவேற்றி இருந்தாலே, தென்னை விவசாயிகள் இன்று இந்த அளவுக்கு நஷ்டம் அடைந்திருக்கமாட்டார்கள்.
2011 முதல் 2021 வரை கொப்பரைக்கு வெளி மார்க்கெட் விலை ரூ. 140. எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடர்ந்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 108.60 என்று உயர்த்தி நிர்ணயம் செய்தது. இதனால் அம்மாவின் அரசில் 10 ஆண்டுகளாக தென்னை விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
இன்று, வெளி மார்க்கெட்டில் கொப்பரை கிலோ ரூ. 70/-க்கும் கீழே சென்றுவிட்டது. தேங்காயின் விலையும் எட்டு ரூபாயாகக் குறைந்துள்ளது. அந்த விலையானது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து, தேங்காய் வெட்டும் கூலி, தேங்காய் உரித்தல் கூலி மற்றும் டிராக்டர் வாடகை என்று தென்னை விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு இரண்டு மடங்காகிவிட்டது என்றும், எனவே, வாக்குறுதி எண். 66-ன்படி தற்போது கொப்பரை கிலோ ஒன்றுக்கு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.108.60-லிருந்து ரூ. 150-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் விடியா திமுக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
தென்னை பருவ கால பயிர் கிடையாது. தென்னை மரத்திலிருந்து தேங்காய் 50 நாட்கள் இடைவெளியில் ஆண்டு முழுவதும் பறிக்கப்படுகிறது. ஆனால், அரசு தென்னையை பருவ கால பயிர் பட்டியலில் சேர்த்து வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 291 கிலோ கொப்பரையை மட்டும் கொள்முதல் செய்கிறது. எனவே, வாக்குறுதி எண் 66-ன்படி, விவசாயிகள் 50 நாட்களுக்கு ஒருமுறை என்று, வருடத்திற்கு 7 முறை அரசே கொப்பரையை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தேங்காய் எண்ணெய்யில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதாக ஒரு சிலர் வீண் புரளியை மக்களிடம் கிளப்பிவிட்டு குழப்பத்தை விளைவித்து வருகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்புச் சத்து நமது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புச் சத்தாகும். எனவேதான், நமது அண்டை மாநிலமான கேரளாவில் தேங்காய் எண்ணெய்யை அனைத்து தேவைகளுக்கும், குறிப்பாக சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர்.
எனவே, தேங்காய் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது என்று அரசு, மக்களிடையே பரப்புரையை மேற்கொண்டு பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது குறையும்; அந்நிய செலவாணியும் நமக்கு பெருமளவு மீதமாகும்; மக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே, வாக்குறுதி எண் 66-ன்படி தமிழ் நாடு தென்னை நல வாரியத்தின் மூலம் தேங்காய் எண்ணெய்யை அரசு கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தேங்காய் விலை நிலையானதாக இருக்கும்.
அம்மாவின் ஆட்சிக் காலத்தில் ஒரு உரிமட்டையின் விலை ரூ. 2.50 ஆகும். ஆனால், விடியா திமுக ஆட்சியில் இன்று 20 பைசாவிற்குக்கூட உரிமட்டையை வாங்குவதற்கு யாரும் முன் வருவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்நார்கள் பித்பிளாக் எனப்படும் கட்டிகளாக மாற்றப்பட்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சீனா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டது. விடியா திமுக அரசின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் உதவியின்மையினாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றுமதி படிப்படியாகக் குறைந்து, இன்று முழுவதுமாக நின்றுவிட்டது.
இதனால், மட்டை நாரை வாங்குவதற்கு யாரும் வருவதில்லை. பல கோடி மதிப்பிலான பித்பிளாக் கட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் இன்று தங்களது கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமலும், மின் கட்டண உயர்வு போன்றவற்றாலும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இன்று சுமார் 50 சதவீத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருசிலர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.
எனவே, திமுக தேர்தல் வாக்குறுதி 65-ன்படி, சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தேங்காய் நார் பொருட்களை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நேரடியாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழையபடி வெளிநாட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, விடியா திமுக அரசு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றும்; ஒரு கிலோ கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ. 150-ஆக உயர்த்த வேண்டும் என்றும்; தென்னையை பருவ கால பயிராகக் கருதாமல், ஆண்டுக்கு ஏழு முறை குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; தேங்காய் எண்ணெய்யை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றும்; தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தென்னை விவசாயிகளை ஒன்று திரட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.