சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பேசுகிறார்
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சிவகாசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சிவகாசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
பொதுக்கூட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்குகிறார்.
இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
விழா ஏற்பாடு
இந்த கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் பேருக்கு இருக்கைகள் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
பொதுக்கூட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கலந்து கொள்ள இருப்பதால் பந்தல் அமைக்கும் பணியினை விரிவுபடுத்த வலியுறுத்தினர். வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்தவும், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்திருப்பதையும் ஆய்வு செய்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் மாவட்ட செயலாளர் விஜய்ஆனந்த் தலைமையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ள இடத்தினையும் முன்னாள் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
மதுரையிலும் கூட்டம்
சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் வருகிறார். அங்கு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு பின்னர் கார் மூலம் திருத்தங்கல் வருகிறார்.
காலை 10 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பேசிய பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் திருத்தங்கலில் இருந்து கார் மூலம் விருதுநகர் செல்கிறார். மதிய உணவுக்கு பின்னர் விருதுநகரில் இருந்து மதுரை செல்லும் அவர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.