தி.மு.க. என்றாலே குடும்ப அரசியல்தான்: "தொண்டனாக இருந்து மக்களை நேசிப்பவன் நான்" சிவகங்கை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தொண்டனாக இருந்து மக்களை நேசிப்பவன் நான். மு.க.ஸ்டாலினைப்போன்று தலைவனாக இருந்து மக்களை பார்க்கவில்லை என சிவகங்கை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொண்டனாக இருந்து மக்களை நேசிப்பவன் நான். மு.க.ஸ்டாலினைப்போன்று தலைவனாக இருந்து மக்களை பார்க்கவில்லை என சிவகங்கை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
சிவகங்கையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அங்கு மதுரை சாலையில் உள்ள அம்மா அரங்கத்தில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், கோகுல இந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜலட்சுமி, மணிகண்டன், காமராஜ், விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி பேச்சு
விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் இந்த பொதுக்கூட்டத்துக்கு தற்போது வரை தி.மு.க. அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடர்ந்து, அனுமதி பெற்று இந்த கூட்டத்தை தற்போது நடத்தி வருகிறோம்.
அ.தி.மு.க. ஆட்சியில், நான் முதல்-அமைச்சராக இருந்த போது யாரெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கு அனுமதி கேட்டார்களோ, அத்தனை பேருக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி கொடுத்தோம். இதற்கெல்லாம் ஒரு தில் வேண்டும். தமிழகத்தில் இருந்த முதல்-அமைச்சர்களிலேயே நான் முதல்-அமைச்சராக இருந்த சமயத்தில்தான் அதிகமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.
ஆனால் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் என்றாலே அச்சப்படுகிறார். அ.தி.மு.க.வின் சாதனைகள், ஜெயலலிதாவின் சாதனைகள், திட்டங்கள், நலத்திட்டங்கள் பற்றி மக்களிடம் கூறவும், கடந்த 22 மாதங்களாக நடந்து வரும் தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்து கூறுவதற்கும்தான் இந்த கூட்டம். ஜனநாயக நாட்டில் கோர்ட்டுக்கு சென்று அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய அவலம் இந்த விடியா ஆட்சியில்தான் நடக்கிறது.
ஆட்சியும், காட்சியும் மாறும்
இந்த 22 மாதங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அ.தி.மு.க. வெளிச்சம் போட்டு காட்டுவதை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள். சென்னை ஆர்.கே.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்தது குறித்து வீடியோவாக ஒளிபரப்பினோம். உடனடியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுவா ஜனநாயக ஆட்சி?
இவர்தான் இந்தியாவின் முதன்மையான முதல்-அமைச்சரா? எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு தி.மு.க. அரசு அனுமதி அளிப்பதே கிடையாது.
காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. மேலே இருக்கிறவர்கள். கீழே வருகிறார்கள். கீழே இருப்பவர்கள் மேலே சென்று கொண்டிருக்கிறார்கள். ஆட்சியும் காட்சியும் விரைவில் மாறும்.
ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பிரதான கட்சி அ.தி.மு.க. இந்த கட்சியை ஒடுக்கவோ, அழிக்கவோ நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை போன்று இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்களும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். நாங்கள் அனைவரும் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உழைத்து முன்னேறி உள்ளோம். தி.மு.க.வைப் போல கொள்ளையடிக்கவில்லை. மக்களின் உள்ளத்தை வென்று முன்னேறி உள்ளோம்.
சபதம்
எனவே எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அவற்றை சந்திப்போம். இந்த வழக்குகளை கண்டு அஞ்சுகிறவர்கள் நாங்களல்ல. இந்த மண் வீரம் செறிந்த மண். வீரமங்கை வேலு நாச்சியார் ஆட்சி செய்த மண். இந்த மண்ணைச் சேர்ந்த வீரம் செறிந்தவர்களின் துணையுடன் விரைவில் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம்.
எத்தனை தடைகள், சோதனைகள் வந்தாலும், அதையெல்லாம் முறியடிக்கும் கட்சி அ.தி.மு.க.
தமிழக சட்டசபையில் கணக்கு கேட்டதற்காக எம்.ஜி.ஆருக்கு எதிராக நடவடிக்கைகள் பாய்ந்தன. அப்போது அவர் அடுத்ததாக சட்டசபைக்குள் நுழைவதாக இருந்தால் முதல்-அமைச்சர் ஆகத்தான் நுழைவேன் என சபதம் மேற்கொண்டு வெளியேறினார். அதேபோல அடுத்த முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக ஆனார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். அவர் மீதும் சட்டசபையில் பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதேபோல ஜெயலலிதாவும் முதல்-அமைச்சராகத்தான் மீண்டும் சட்டசபைக்குள் நுழைவேன் என்று சபதம் எடுத்து 1991-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் தி.மு.க.வினர் அப்படி அல்ல பல்வேறு இடையூறுகளை அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.
'பி' அணி
இவர்களுக்கு 'பி' அணியாக ஒரு அணி உள்ளது. அவர்கள் இன்றைக்கு காலையிலேயே சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உண்மையான அ.தி.மு.க.வினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா? 'பி' அணியை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு இடையூறு அளிக்க நினைத்தால் எதிர்காலத்தில் தி.மு.க. இல்லை என்ற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
கடந்த 31 ஆண்டுகால அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு, ஈடு இணையாக இந்தியாவில் எந்த கட்சியும் கிடையாது. அப்படிப்பட்ட ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இந்த கட்சி, ஏழை எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும். இந்த கட்சியால் ஏராளமான நன்மைகளை ஏழை, எளியோர் பெற்றுள்ளனர்.
மக்களுக்கு வேட்டு
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் சேர்மன் ஆக ஸ்டாலின் உள்ளார். இயக்குனர்களாக அமைச்சர் உதயநிதியும், கனிமொழியும் செயல்படுகிறார்கள். எனவே தமிழகத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. கடந்த 22 மாதங்களில் அதிக அளவில் மக்கள் விரோதத்தை சம்பாதித்தது என்றால், நாட்டிலேயே தற்போதைய தி.மு.க. ஆட்சிதான். வேறு எந்த கட்சியும் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்தது கிடையாது. ஏனென்றால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மக்களுக்கு வேட்டு வைப்பது ஒன்றுதான் தி.மு.க.வின் நடவடிக்கையாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என அவர்கள் கூறி வருகின்றனர்.
நாங்கள் பல்வேறு திட்டங்களை சிவகங்கை மாவட்டத்திற்கு செயல்படுத்தி உள்ளோம். அமைச்சர் உதயநிதியோ சினிமாவில் ஏராளமாக சம்பாதிக்கிறார். சினிமா படங்களை எல்லாம் குறைந்த விலைக்கு கேட்டதால் 150 படங்கள் பெட்டிக்குள் தூங்குகின்றன. அரசியலிலும் சம்பாதிக்கின்றனர். சினிமாவிலும் சம்பாதிக்கின்றனர். கருணாநிதியின் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அங்கிருந்து கடலில் 300 அடி தூரத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா சிலை வைப்பது அவசியமா? அண்ணா அறிவாலயத்திலேயோ, கலைஞர் நினைவிடத்திலையோ, சிறிய அளவில் பேனா சிலை வைத்துவிட்டு, எழுதும் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கலாமே?
இப்போது எந்த திட்டமாக இருந்தாலும் அமைச்சர் உதயநிதிதான் அடிக்கல் நாட்டுகிறார். ஏன் கட்சியில் மூத்த அமைச்சர்கள் யாரும் இல்லையா?
குடும்ப அரசியலையே இது காட்டுகிறது. ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை தொண்டர்கள் உயர் பதவிகளை அடையலாம். உதாரணமாக என்னை இவ்வளவு பெரிய சிறந்த பதவியில் நீங்கள் அமர வைத்து உள்ளீர்கள். இதுதான் ஜனநாயக கட்சி. மு.க.ஸ்டாலின் தலைவனாக இருந்து கட்சிக்காரர்களையும், மக்களையும் பார்க்கிறார். நான் தொண்டர்களில் ஒருவனாக இருந்து மக்களை நேசித்து பணியாற்றுகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.