தை பிறந்ததால் அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது:தலைவாசல் கால்நடை பூங்கா அருகில்தோல் தொழிற்சாலை அமைக்க கூடாதுபொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தை பிறந்ததால் அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது என்றும், தலைவாசல் கால்நடை பூங்கா அருகில் தோல் தொழிற்சாலை அமைக்க கூடாது எனவும் பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தலைவாசல்,
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் சிறுவாச்சூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். நல்லதம்பி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழக எதிர்க்கட்சி தலைவரும, முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சிறுவாச்சூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கால்நடைகளுக்கு உணவு
தொடர்ந்து சிறுவாச்சூர் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள சந்தைப்பேட்டை மைதானத்தில் பொங்கலிட தயாராக வைக்கப்பட்டு இருந்த பானைகளில் அரிசியை போட்டு பொங்கல் விழாவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் பானையில் பொங்கலிட்டார். 19 கால்நடைகளுக்கு அகத்திக்கீரை, அருகம்புல் ஆகியவற்றை உணவாக வழங்கினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. அ.தி.மு.க.வுக்கும் வழி பிறந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
குடிமராமத்து திட்டம்
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டன. இதன்மூலம் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயம் செழிப்படைந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்கக்கோரி போராட்டம் அறிவித்த பிறகே தி.மு.க. அரசு கரும்பு வழங்கியது. அதேபோல் ஒவ்வொரு மக்கள் திட்டங்களும் போராட்டம் அறிவித்த பிறகே தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா நம்முடைய தலைவாசல் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த திட்டத்தை தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சட்டசபையில் பேசினேன். தற்போது கால்நடை பூங்கா அருகில் தோல் தொழிற்சாலை கொண்டு வரப்படுவதாக தகவல் வந்துள்ளது. அப்படி தோல் தொழிற்சாலை கொண்டு வரப்பட்டால் கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் பாதிக்கப்படும். மக்களை பாதிக்கும். இதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
7.5 சதவீதம் இடஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காக மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதால் 564 கிராமப்புற மாணவ- மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இந்த கிராமத்தில் கூட ஒரு மாணவி இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவர் என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய இந்த பொங்கல் நாளில் சபதம் ஏற்போம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்சங்கரன், சித்ரா, ராஜமுத்து, மணி, பாலசுப்பிரமணியம், சுந்தரராஜன், செந்தில்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இளைஞர் அணி செயலாளர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜராஜசோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் சிறுவாச்சூர் ஊராட்சி தலைவர் சுமதி நன்றி கூறினார்.