எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டை வைத்த மர்மநபர்களால் பரபரப்பு


எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டை வைத்த மர்மநபர்களால் பரபரப்பு
x

திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டை வைத்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனித்தாலுகா 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது. தாலுகா அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தொடக்கவிழாவின்போது அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பெயரில் கல்வெட்டு பதிக்கப்பட்டது. பின்னர் திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகில் புதிதாக ரூ.3 கோடி செலவில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்தநிலையில் தாலுகா அலுவலக தொடக்கவிழாவின்போது வைக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டை புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் பதித்து சென்றுவிட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வருவாய் துறை அதிகாரிகள் கல்வெட்டை அங்கிருந்து அகற்றினர். கல்வெட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்தது யார்? என திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story