'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை எல்லோரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும்' எடப்பாடி பழனிசாமி பேச்சு


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை எல்லோரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

நம்முடைய வழி தனி வழியாக இருக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தேனி,

தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக காரில் தேனி மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக, ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அவருக்கு, தேனி அருகே மதுராபுரி புறவழிச்சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கே.சி.கருப்பணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேள, தாளங்கள் முழங்க, பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அவருக்கு வீரவாள், பூங்கொத்து, சால்வை போன்றவை கொடுத்து வரவேற்றனர்.

நம்முடைய வழி தனி வழி

வரவேற்பு நிகழ்ச்சியில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தேனி மாவட்டமே குலுங்கும் அளவுக்கு மக்கள் கடல் போல் குவிந்து வரவேற்பு கொடுத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் நன்றி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். அதுதான் இருபெரும் தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

எவ்வளவோ பேர் எப்படியோ இருக்கிறார்கள். அது பற்றி கவலை இல்லை. நம்முடைய வழி தனி வழியாக இருக்க வேண்டும். நேர்மையான வழியாக இருக்க வேண்டும். இருபெரும் தலைவர்கள் கண்ட கனவு என்பது, மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். தமிழகம் ஏற்றம் பெற வேண்டும்.

ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். அதற்காக வாழ்ந்து மறைந்த தலைவர்களின் வழியில் நின்று மிகச் சிறப்பாக, எழுச்சியான எதிர்காலத்தை நோக்கி செல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story