தொலைதூர கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் -ஐகோர்ட்டு கருத்து


தொலைதூர கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் -ஐகோர்ட்டு கருத்து
x

தொலைதூர கல்வி மூலமாக படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நித்யா. இவர், ஆங்கில பாடத்தின் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "மனுதாரர் பி.லிட், பி.எட், எம்.ஏ ஆகிய பட்டங்களை பெற்ற பின்னர், பி.ஏ., ஆங்கிலம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பி.ஏ. ஆங்கிலம், அதைத்தொடர்ந்து பி.எட். படித்து இருந்தால் மட்டுமே அவரை ஆங்கில பட்டதாரி ஆசிரியராக நியமிக்க முடியும். மேலும், எம்.ஏ. தமிழ், பி.எட். ஆகிய படிப்புகளை தொலைதூர கல்வி வாயிலாக படித்துள்ளார்" என்று வாதிட்டார்.

ஆய்வு இல்லை

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரரை தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கலாம். ஆனால், ஆசிரியர் பதவி என்பது புனிதமான, திறமையானவர்களுக்கான பதவி ஆகும். அதனால், தொலைதூர கல்வி வழியாக படித்தவர்களை விட, கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பது சிறந்ததாக இருக்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதியை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று கருதுகிறேன். முறையான தகுதிகளை கொண்டவர்களையே இப்பதவிக்கு அரசு நியமிக்க வேண்டும்.

தரமான கல்வி

கல்வி உரிமை சட்டத்தின்படி, தரமான கல்வியை குழந்தைகளுக்கு அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் நம் தேசம் சிறந்து விளங்கும். எனவே, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றினால், தகுதியானவர்களை ஆசிரியர்களாக அரசு நியமித்து, தரமான கல்வியை வழங்க வேண்டும்.

ஆனால், கல்வி நிலையம் சென்று படிக்காமல் தொலைதூர வழி கல்வியில் படித்தவர்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பதவியை வகிப்பது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நபர்கள் அமைச்சுப் பணியில்தான் பணியாற்ற வேண்டும்.

பெரும் தொகை

தமிழ்நாட்டில் கல்விக்காக நடப்பு கல்வி ஆண்டில் 36 ஆயிரத்து 895 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பெரும் தொகை ஆசியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகின்றன. அதேநேரம், அகில இந்திய அளவில் தரமான கல்வி வழங்கும் மாநிலங்களில், தமிழ்நாடு கல்வியில் 27-வது இடத்தில் உள்ளது.

இந்த தேசத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கவேண்டும். தொலைதூர கல்வி மூலமாக படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ கிடையாது.

உத்தரவாதம்

இந்த வழக்கில் தமிழக தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "தொலைதூர கல்வி முறையில் படித்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இடையூறு இல்லாமல், எதிர்வரும் காலங்களில் கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உரிய நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்" என்று உத்தரவாதம் அளித்துள்ளார்,

எனவே, கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில், ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான நடைமுறையை 3 மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story