தொழில் தொடங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


தொழில் தொடங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
x

தொழில் தொடங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட தொழில் மையம்

குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் துறை கொள்கையின் படி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்த பட்சம் 8-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்டோர். பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் 55 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்திற்குள்ளும், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள், ஆட்டிசம் குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் வயது உச்சவரம்பு 45-ல் இருந்து 55 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியிலிருந்தும் விலக்களிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும். கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.3.75 லட்சம் பெற்று பயன் பெறலாம். நேரடி விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story