சிறுபான்மை நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் முன் கல்வித்துறை ஒப்புதல் பெற வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சிறுபான்மை நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் முன் கல்வித்துறை ஒப்புதல் பெற வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பாக கல்வித்துறை ஒப்புதல் பெற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பாக கல்வித்துறை ஒப்புதல் பெற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆசிரியையாக அங்கீகாரம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ம் ஆண்டில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் ஜேசுபிரபாவின் நியமனத்தை அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

ஆனால் தன்னை 2014-ம் ஆண்டில் இருந்து ஆசிரியையாக அங்கீகாரம் செய்ய வேண்டும் என்றும், அந்த ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிடக்கோரி ஜேசுபிரபா, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று தனி நீதிபதி 2019-ம் ஆண்டில் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்ததை மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

உபரி ஆசிரியர்கள்

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தாரணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசின் முன் அனுமதி பெறாமல் பணி நியமனங்களை மேற்கொள்வது அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என கூறப்படுகிறது. ஆசிரியர்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பணி நியமனங்கள் அந்தந்த மறைமாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு மூப்பு பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு மறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையான பதிவேட்டை பராமரித்து வருகின்றன. இந்த நியமனங்களை ஆய்வு செய்தால் பணி நியமனம் பெற்றவர்கள் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாகவும், ஒரே மதப் பிரிவை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். கல்வித்துறை உபரி ஆசிரியர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த நிர்வாகங்கள் ஒரு பள்ளியில் காலியிடம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்தை நிரப்புகின்றன.

அனுமதி பெற வேண்டும்

இன்னொரு பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இருப்பதை இவர்கள் கண்டுகொள்வதில்லை. எனவே எதிர்காலத்தில் கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற்ற பின்புதான், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அதே நேரத்தில் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி நிர்வாகம் அனுப்பும் பரிந்துரைகளை காரணம் இல்லாமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்ற பரிந்துரைகள் மீது 10 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அந்த வகையில் இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவு, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட தேவையில்லை. இந்த சீராய்வு மனு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story