தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கப்படும்


தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கப்படும்
x

தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கப்படும் என நாகையில் நடந்த கல்விக்கடன் மேளாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்

தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கப்படும் என நாகையில் நடந்த கல்விக்கடன் மேளாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கல்விக்கடன் (கல்விக்கடன் மேளா) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் முகமதுஷா நவாஸ், நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் கல்விக்கடன் விண்ணப்பத்தை மாணவ, மாணவிகளிடம் வழங்கி கூறியதாவது:-

வேலை வாய்ப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலை வாய்ப்புகள் கிடைக்க நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் எவ்வித இடையூறும் இன்றி கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கு பெறும் கல்விக்கடன் மேளா நடத்த உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கல்விக்கடன் மேளா இன்று (அதாவதுநேற்று) நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும். அத்தகைய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நிறைவேற்ற கடன் மேளா உதவி செய்யும்.

ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்

கல்வி கட்டணம் ரூ.4 லட்சத்திற்கு மேலும், ரூ.7½ லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். கல்விக்கடன் மேளாவில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். http://www.vidyalakshmi.co.in/ என்ற இணைய தள முகவரியில் பொதுவான கல்வி கடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உங்கள் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு இணையம் வாயிலாக சென்றடையும். அங்கு பரிசீலனை செய்து இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கப்படும்.

18 வங்கிகள் பங்கேற்பு

கல்விக்கடன் வழங்க நிராகரிப்பு செய்யும் போது எதற்காக நிராகரிப்பு செய்யப்படுகிறது என்ற தகவல்களும் தெரிவிக்கப்படும். இந்த கல்விக் கடன் மேளாவில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் என 18 வங்கிகள் கலந்து கொண்டன.இதில் 300 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (வளர்ச்சி) பானோத்ம்ருகேந்தர்லால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், முன்னோடி வங்கி உதவி பொது மேலாளர் எபனேசர்சோபியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story