பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி
தாமரைக்குளம் ஊராட்சியில் பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியும், அரசு உயர்நிலை பள்ளியும் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கிராம மக்கள் மற்றும் டால்மியா சிமெண்டு, ராம்கோ சிமெண்டு நிறுவனங்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி, ராம்கோ சிமெண்டு மண்டல துணை மேலாளர் சதானந்து, டால்மியா சிமெண்டு ஆலை தலைவர் ராபர்ட் மற்றும் கிராம மக்கள் கல்விச்சீர்வரிசையுடன் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க பள்ளிகளுக்கு சென்றனர். பின்னர் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி ஆகியோரிடம் டேபிள், நாற்காலி, கம்ப்யூட்டர், பீரோ உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினார்கள்.