பொள்ளாச்சியில் ஆள்இறங்கு குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஆள்இறங்கு குழி சேதம்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 7400 ஆள்இறங்கு குழிகளும், 18 கழிவுநீரேற்று நிலையங்களும், 3 கழிவு நீர்உந்து நிலையங்களும், 17.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர்உந்து குழாய்களும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாட்டு சந்தை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் வீட்டு இணைப்பு கொடுத்த வீடுகளில் இருந்து கழிவுநீர் குழாய் வழியாக செல்கிறது. இந்த நிலையில் வடுகபாளையம் மயானம் அருகில் ஆள்இறங்கு குழி சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் பல இடங்களில் ஆள்இறங்கு குழிகள் சேதமடைந்து உள்ளன. வடுகபாளையம் மயானம் அருகில் ஆள்இறங்கு குழி சேதமடைந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதேபோன்று பல இடங்களில் ஆள்இறங்கு குழிகள் சேதமடைந்து உள்ளன. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எந்தெந்த பகுதிகளில் ஆள்இறங்கு குழிகள் சேதமடைந்து உள்ளது என்பது குறித்து கணக்கெடுத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.