கிராமிய கலைத்துறையை மீட்டெடுக்கும் முயற்சி நடக்கிறது -அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

கிராமிய கலைத்துறைகளை மீட்டெடுக்கும் முயற்சி நடக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கிராமிய கலைத்துறைகளை மீட்டெடுக்கும் முயற்சி நடக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கிராமிய கலைஞர்கள்
தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபால கிருஷ்ணன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநிலத்தலைவர் சோமசுந்தரம், அரசு இசைப்பள்ளிகளின் கலை இயல் ஆலோசகர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி மேளம், கட்டை கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது..
பிரச்சினை தீர்க்கப்படும்
இதைதொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து கிராமிய கலைஞர்களும் மதுரையில் சங்கமித்து உள்ளார்கள். கிராமிய கலைகளில் ஆர்வம் கொண்ட பலர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். தமிழக பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கக்கூடியது கிராமிய கலைகள். கிராமிய கலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கிராமிய கலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிராமிய கலைஞர்கள் வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு எளிமையாக்குவதற்காக ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கைக்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்த துறைகள் முடங்கி விட்டன. அவற்றை மீட்டெடுக்கும் விதமாக அந்த துறை சார்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நிச்சயமாக இதனுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார்.






