போட்டித்தேர்வில் வெற்றிபெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்

அரசு வேலைகளுக்கு போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அமைச்சர் காந்தி வலியுறுத்தினார்.
குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. பொதுமக்கள் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வீடு, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 268 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து மனுக்களுக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உதவித்தொகை
கூட்டத்தில் சோளிங்கர் வட்டம், சோமசமுத்திரம் காலனியை சேர்ந்த ஏ.மணி என்ற முதியவர் அளித்த மனுவில், தான் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாகவும், போக்குவரத்து செலவினை மேற்கொள்ள போதிய வசதியில்லை. 58 வயதே ஆவதால் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கும் தகுதியில்லை. ஆகவே, போக்குரவத்து செலவுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடுமாறு அமைச்சரிடம் மனு வழங்கினார்.
உடனடியாக மாதந்தோறும் தனது சொந்த செலவில் ரூ.1,000 வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்து தன்னுடைய அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
போட்டித்தேர்வு
பின்னர், வேலைவாய்ப்பு வேண்டி வரும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற வேண்டும். அரசு வேலைக்கு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து, அதில் வெற்றி பெறுவதற்கான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி (பொது), மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, உதவி ஆணையாளர் (கலால்) வரதராஜ். மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






