வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நாமக்கல் மண்டலம் நோயில்லா மண்டலமாக அறிவிக்கப்படுமா? ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு


வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர  நாமக்கல் மண்டலம் நோயில்லா மண்டலமாக அறிவிக்கப்படுமா?  ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)
நாமக்கல்

வெளிநாடுகளுக்கு தொடர்ந்து முட்டை ஏற்றுமதி நடைபெற நாமக்கல் மண்டலத்தை நோயில்லா மண்டலமாக அறிவித்து தரச்சான்று அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா? என்று முட்டை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாமக்கல் மண்டலம்

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் பள்ளி சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் குவைத், ஈராக், ஈரான், கத்தார், மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கத்தார் நாட்டில் நடைபெறும் உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. முன்னதாக கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது கால்பந்து போட்டி நடைபெறுவதால் 1½ கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் நாமக்கல் மண்டலம் முன்னிலை வகிக்கிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே தொடர்ந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

குறிப்பாக நாமக்கல் மண்டலத்தை நோயில்லாத மண்டலமாக அறிவித்து தரச்சான்று அளிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கோழிப்பண்ணையாளர்களும், ஏற்றுமதியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர், ஊழியர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மானியம் குறைப்பு

முட்டை ஏற்றுமதியாளர் டாக்டர் பி.வி.செந்தில்:-

கடந்த 2006 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வெளிநாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 1 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. மாதம் 30 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. குவைத், ஈராக், ஈரான், கத்தார் உள்பட 17 நாடுகளுக்கு முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் நாமக்கல் மண்டலத்தை நோயில்லா மண்டலமாக அறிவிக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் அவை படிப்படியாக குறைந்தது. அதோடு முட்டை ஏற்றுமதிக்கான மானியமும் 7 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு 1 சதவீதமானது. இதன் காரணமாக உக்ரைன், துருக்கி உள்ளிட்ட நாடுகள் முட்டை வர்த்தகத்தை கைப்பற்றின.

மாதம் 30 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், மாதம் 1 கோடி முட்டைகள் மட்டும் ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இதனிடையே உக்ரைன் போர் மற்றும் கத்தாரில் கால்பந்து போட்டி காரணமாக மீண்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்

தொடர்ந்து முட்டை ஏற்றுமதி நடைபெறும் வகையில் நாமக்கல் மண்டலத்தை நோயில்லா மண்டலமாக அறிவித்து தரச்சான்று அளிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மானியத்தை பழையபடி 7 சதவீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் முட்டை ஏற்றுமதி தொடர்ந்து தடையின்றி நடைபெறும். கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.


Next Story