விற்பனை அதிகரிப்பால் முட்டை விலை உயர வாய்ப்பு-சங்க தலைவர் சிங்கராஜ் தகவல்
நாமக்கல்:
முட்டை விற்பனை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர வாய்ப்புள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
6 கோடி முட்டைகள் உற்பத்தி
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) வாரத்தில் 3 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வந்தது.
சில நேரங்களில் நெஸ்பேக் அமைப்பினர் மற்றும் முட்டை வியாபாரிகள் சங்கத்தினர் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, மைனஸ் செய்து பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யும் விலையை அறிவித்தனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.
அதே நேரம் சில்லரை விற்பனையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலைக்கு மேல் லாபம் வைத்து விற்பனை செய்வதால், பொதுமக்கள் முட்டைக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது.
மைனஸ் விலை ரத்து
கடந்த 6 மாதங்களில் கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்து, முட்டை விற்பனை சரிவடைந்ததால், பல வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு முட்டையை கொள்முதல் செய்தனர். இதனால் கோழிப்பண்ணை தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. பண்ணையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வந்தது. இதை மாற்றி அமைக்க கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் முட்டைக்கு மைனஸ் விலை இல்லாமல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிக்கும் விலையை மட்டுமே தமிழகம் முழுவதும் பண்ணையாளர்களும், வியாபாரிகளும் கடைபிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது முட்டைக்கான மைனஸ் விலை ரத்து செய்யப்பட்டது. புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.
விலை உயர வாய்ப்பு
முட்டை விலை நிர்ணயம் செய்யவும், முட்டை விற்பனையை கண்காணிக்கவும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டியின் முடிவின்படி இனி நாள்தோறும் மாலை 6 மணிக்கு முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும்.
தற்போது அனைத்து மாநிலங்களிலும் முக்கிய திருவிழாக்கள் முடிவடைந்து உள்ளதால், முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே வரும் நாட்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே பண்ணையாளர்கள் அனைவரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டையை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.