கருமுட்டை விவகாரம்: தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை


கருமுட்டை விவகாரம்: தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை
x

ஈரோட்டை சேர்ந்த சிறுமியிடம் 3 ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக, கேரளா மற்றும் ஆந்திராவிற்கும் சென்று விசாரணை நடத்த, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகள் மூலமாக விற்பனை செய்து வந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவரது 2வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி, மற்றும் போலி ஆதார் அட்டை ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் என்பவர் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்tஹநிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக அதாவது தனது 14வது வயதில் இருந்தே கருமுட்டை கொடுத்து வந்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

ஐ.சி.எம்.ஆர் விதிகள் படி ஒருவரிடமிருந்து ஒரு முறை மட்டுமே வாழ்நாளில் கருமுட்டை பெற முடியும். அதுவும் ஏழு முட்டைகள் மட்டுமே. ஆனால், இந்த விதிகள் சிறுமியிடம் முற்றிலும் மீறப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறுமியின் கருமுட்டையை தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஆந்திராவில் ஒரு மருத்துவமனைக்கும் விற்றது மருத்துவ குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குழு, கேரளா மற்றும் ஆந்திரா சென்று விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறையின் மருத்துவ விசாரணை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து சேலத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இடைத்தரகர்கள் இருந்தால், சட்டரீதியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். கருமுட்டைகள் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story