இன்று உலக முட்டை தினம்


இன்று உலக முட்டை தினம்
x

இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.

நாமக்கல்

கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் வேகவைத்த முட்டைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவார்கள்.

முட்டையின் நன்மைகள் குறித்தும், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவது தான் இந்த நாளின் நோக்கம் ஆகும். பொதுவாக கோழிகள் 8 வாரங்களில் முட்டையிட தொடங்கும். அதிகபட்சமாக 72 வாரங்கள் வரை முட்டையிடும். பின்னர் அவற்றை கறிக்காக குறைந்த விலையில் விற்பனை செய்து விடுவார்கள்.

நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரையில் இங்கு 1,100-க்கும் அதிகமாக முட்டைக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 7 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் முட்டை உற்பத்தி சுமார் 1 கோடி வரை குறைந்து உள்ளது. முட்டைக்கான கொள்முதல் விலையை பண்டிகை காலம், விசேஷ நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு தினசரி நிர்ணயம் செய்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளை பொறுத்த வரையில் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் மூலம் கன்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

இந்த தொழிலில் கோழிகளுக்கு தீவனம் இடுதல், தண்ணீர் வைப்பது, கோழிகள் போடும் முட்டைகளை எடுத்து அட்டையில் அடுக்குவது, லாரியில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்புவது, கோழிப்பண்ணைகளை பராமரிப்பது, வடமாநிலங்களில் இருந்து தீவனங்களை கொண்டு வருதல், ஏற்றுமதி முட்டைகளை துடைப்பது, முத்திரை வைப்பது என நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அளவில் முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாமக்கல் மண்டலம் முதலிடம் வகித்து வருகிறது. தற்போது முட்டையின் விலை 510 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டாலும், தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் 600 காசுகளுக்கு விற்பனை செய்தால் மட்டுமே கோழிப்பண்ணை தொழிலை லாபகரமாக நடத்த முடியும் என்கிறார்கள் கோழிப்பண்ணையாளர்கள்.

எனவே கோழி தீவனத்தை மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும். வங்கி கடன்களை நிபந்தனையின்றி வழங்கி, சிறப்பு வாய்ந்த இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பது கோழிப்பண்ணையாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.


Next Story