முட்டை விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும்


முட்டை விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும்
x

வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் முட்டை விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவித்து உள்ளது.

நாமக்கல்

வாக்குப்பதிவு

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு வாரத்தில் 3 நாட்கள் விலை நிர்ணயம் செய்து வருகிறது.

தற்போது செய்யப்படும் விலை நிர்ணயத்தில் பண்ணையாளர்களுக்கு நிலையான விலை கிடைப்பது இல்லை. எனவே மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என பண்ணையாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நேற்று பண்ணையாளர்களிடம் கருத்துகளை கேட்டறிய வாக்குப்பதிவை நடத்தியது. இதில் முட்டை விலை நிர்ணயம் தினசரியா? அல்லது தற்போது உள்ள நடைமுறையா? என்று கேட்கப்பட்டதற்கு பெரும்பான்மையான பண்ணையாளர்களின் விருப்பமாக தற்போதைய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பது பதிலாக கிடைத்தது.

பிறர் செய்யக்கூடாது

இதேபோல் பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பது தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு (என்.இ.சி.சி.) விலைக்கா? அல்லது நிலையான மைனஸ் விலைக்கா? என்ற கேள்விக்கு பெரும்பான்மையான பண்ணையாளர்களின் தேர்வாக 'நோ மைனஸ் நெக் ரேட்' (தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலைக்கே விற்பனை செய்வது) என்பது பதிலாக கிடைத்தது.

முட்டை விற்பனை விலையை அறிவிப்பது தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மட்டுமே செய்யலாம். பிறர் செய்யக்கூடாது அல்லது மற்றவர்களும் செய்யலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பெரும்பான்மை பண்ணையாளர்களின் தேர்வாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மட்டுமே செய்யலாம் என்பது பதிலாக கிடைத்தது.

தினசரி விலை நிர்ணயம்

இது தொடர்பான தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் நாமக்கல் மண்டல துணை தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருத்து கேட்பு வாக்குப்பதிவில் 'நோ மைனஸ் நெக் ரேட் வேண்டும்' என்பதே பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருந்தது. அதேபோல் முட்டை விலை நிர்ணயம் தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக இருந்த போதிலும், 'நோ மைனஸ் நெக்ரேட்' என்று வைக்கும் போது, அதனை சரிவர நடைமுறைப்படுத்த தினசரி விலை இருந்தால் தான் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதால் தினசரி விலையும் நாமக்கல்லில் அமல்படுத்தப்படும்.

இதே போல வருங்காலங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு மட்டுமே விலை அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருப்பதால், மற்ற அமைப்புகள் விலை அறிவிப்பு செய்ய வேண்டாம். மேலும் வண்டி வாடகை (லயன் மார்ஜின்) உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி என்.இ.சி.சி விலை மற்றும் தினசரி விலை வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

16 குழுக்கள் அமைப்பு

என்.இ.சி.சி. விலை மற்றும் தினசரி விலையை அமல்படுத்த 50 லட்சம் கோழிகளுக்கு ஒரு குழு என்ற வகையில் நாமக்கல் மண்டலத்தில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களின் அறிவுரையின்படி வருங்காலங்களில் முட்டை விலை மற்றும் கோழி விலை நிர்ணயம் செய்வது மட்டுமல்லாமல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு விலை அதாவது நோ மைனஸ் நெக்ரேட் மற்றும் தினசரி விலை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

பண்ணையாளர்கள் அனைவரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு நிர்ணயம் செய்யும் விலைக்கே கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறை அமல்படுத்தப்படும் போது அதற்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story