நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை 30 காசுகள் ஏற்றி, இறக்குவதை தவிர்க்க வேண்டும் பண்ணையாளர்கள் வலியுறுத்தல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை 30 காசுகள் வரை ஏற்றி, இறக்குவதை தவிர்க்க வேண்டும் என பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை 30 காசுகள் வரை ஏற்றி, இறக்குவதை தவிர்க்க வேண்டும் என பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
110 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும்.
முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை கால தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தை பொறுத்த வரையில், கடந்த 8-ந் தேதி முட்டை கொள்முதல் விலை 365 காசுகளாக இருந்தது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த 18-ந் தேதி 475 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
இதற்கிடையில் கடந்த 22-ந் தேதி 30 காசுகள் குறைக்கப்பட்டு, 445 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது, பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:-
30 காசுகள் ஏற்ற, இறக்கம்
முட்டை கொள்முதல் விலையை 10 காசுகள், 15 காசுகள் என்ற அளவில் மட்டுமே உயர்த்த வேண்டும். 25, 30 காசுகள் என உயர்த்துவது அல்லது குறைப்பது சரியல்ல. ஐதராபாத் மண்டலத்தில் திடீரென முட்டை விலையை ஏற்றுவது மற்றும் குறைப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். அதையே தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு (நெக்) பின்பற்றுகிறது. அதை கைவிட்டு தமிழகத்தில் முட்டையின் தேவையை அறிந்து விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. அதன் காரணமாக, பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 30 காசுகள் குறைத்து விற்பனை செய்ய பரிந்துரைப்பதை பெரும்பாலான பண்ணையாளர்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விற்பனை பாதிக்கும்
இது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் நிர்வாகிகள் கூறியதாவது :-
ஐதராபாத் மண்டலத்தை விட நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை கூடுதலாக நிர்ணயம் செய்தால், அங்குள்ள முட்டைகள் சென்னைக்கு விற்பனைக்கு வந்து விடும். அவ்வாறு வந்தால் இங்கு முட்டை விற்பனை பாதிக்க கூடும். எனவே தான் ஐதராபாத் மண்டலத்தை அனுசரித்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் முட்டையின் தேவையை அறிந்து தான் விலையை ஏற்றி, இறக்குகிறோம். அதில் எந்த குளறுபடியும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






