முட்டை உற்பத்தி 10 சதவீதம் சரிவு


முட்டை உற்பத்தி 10 சதவீதம் சரிவு
x

நாமக்கல் மண்டலத்தில் வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி சுமார் 10 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் துணை தலைவர் சிங்கராஜ் கூறினார்.

நாமக்கல்

கலந்தாய்வு கூட்டம்

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு சார்பில், முட்டையின் சந்தை நிலவரம் குறித்து விவாதிக்க பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடத்தப்பட்டது. மண்டல துணை தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த 3 மாதமாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் விலைக்கே, பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும் மைனஸ் விலைக்கு விற்பனை செய்து விடக்கூடாது என்பது குறித்து பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

முட்டை ஏற்றுமதி

துபாய், இலங்கை, ஓமன், கத்தார் ஆகிய வெளிநாடுகளுக்கு தினசரி 50 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து மேலும் பல நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்காக, மத்திய, மாநில அரசுகளை அணுகி, ஏற்றுமதிக்கான தடைகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டு, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் சில நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முட்டை விற்பனை மற்றும் ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே வருங்காலத்தில் கோழிப்பண்ணை தொழிலை நடத்த முடியும். காரணம் கோழி தீவன மூலப்பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது, முட்டை விலை 550 காசு வரை விற்பனை செய்தால் மட்டுமே தொழிலை நடத்த முடியும். வாங்கின கடனையும், தவறாமல் செலுத்த முடியும்.

உற்பத்தி சரிவு

கடந்த ஒரு வாரமாக, வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. அதனால் முட்டை உற்பத்தி சுமார் 10 சதவீதம் வரை குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை உயர்ந்தால் தான் பண்ணையை நடத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜ், ஏற்றுமதியாளர் சங்க துணைத்தலைவர் வில்சன், மண்டல குழு உறுப்பினர்கள் நாகராஜ், வெங்கடாஜலம் உள்பட ஏராளமான கோழிப்பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story