ஓவியங்களால் ஒளிரும் ேகாவை மாநகரம்
தொழில் நகரமான கோவையில் மேம்பால தூண்கள், அரசு கட்டிட சுவர்களில் கலைநயமிக்க ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதனால் ேகாவை மாநகரம் ஓவியங்களால் ஒளிரும் வகையில் காட்சி அளிக்கிறது
கோவை
தொழில் நகரமான கோவையில் மேம்பால தூண்கள், அரசு கட்டிட சுவர்களில் கலைநயமிக்க ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதனால் ேகாவை மாநகரம் ஓவியங்களால் ஒளிரும் வகையில் காட்சி அளிக்கிறது.
முகம் சுழிக்க வைக்கும் போஸ்டர்கள்
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை 2-வது பெரிய மாநகரமாக திகழ்வதுடன், தொழில் நகரமாகவும் விளங்குகிறது. இதனால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த தொழில்முனைவோர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். இது தவிர ஏராளமான மருத்துவமனைகள், ஆயுர்வேத மையங்கள் உள்ளன. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக பலரும் வருகை தருகின்றனர்.
மிக முக்கிய மாநகரமாக விளங்கும் கோவையில் அரசு கட்டிட சுவர்கள், மேம்பால தூண்களில் சிலர் போஸ்டர்களை ஒட்டுகின்றனர். இதனால் கோவை மாநகருக்கு வரும் வெளியூரை சேர்ந்தவர்கள் முகம் சுழிக்கும் நிலை காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.
சுவர்களில் ஓவியங்கள்
இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் அரசு சுவர்கள், மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இதை மீறிய அமைப்புகள், நிறுவனங்கள் மீது போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் தொடரத்தான் செய்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் வகையில் மேம்பால தூண்கள், அரசு சுவர்களில் ஓவியங்கள் வரைய திட்டமிடப்பட்டது. இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாக போஸ்டர் ஒட்டுவது குறைந்து உள்ளது. இந்த ஓவியங்களால் மாநகரம் ஒளிரும் வகையில் காட்சி அளிக்கிறது.
ராஜ ராஜ சோழன்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
லங்கா கார்னர் ரெயில்வே மேம்பால சுவர்களில் ராஜ ராஜ சோழனின் உருவம், தஞ்சை பெரிய கோவில், கரிகால சோழன் உருவம், இயற்கை காட்சிகள், வனவிலங்குகள் ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளது.
மத்திய மண்டல மாநகராட்சி சுவரில் தமிழ் எழுத்துகள், தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. காந்திபுரம் மேம்பால தூண்களில் சிலப்பதிகார கதையை ஓவியமாக தீட்டி வைத்து உள்ளோம். அவினாசி ரோடு பழைய மேம்பால தூண்களில் பட்டாம் பூச்சி, கரடி, புலி, சிங்கம், ஜல்லிக்கட்டு, நெசவு செய்யும் பெண், வ.உ.சிதம்பரனார் ஓவியங்களும் தீட்டப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை அந்த வழியாக செல்பவர்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.