பல்வேறு சட்டங்கள், விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லையை தடுக்க விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் - கலாசேத்ரா அறக்கட்டளைக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பல்வேறு சட்டங்கள், விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லையை தடுக்க விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் - கலாசேத்ரா அறக்கட்டளைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்ட விதி களுடன் பாலியல் தொல்லைகளை தடுக்க விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கலாசேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் கலாசேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக்கூடாது.

குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் 7 மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், 'பாலியல் புகார் அளித்த மாணவிகளுக்கு மற்றும் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழைய கூடாது. கலாசேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என்றும் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, 'பாலியல் குற்றச்சாட்டு குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை ஏன் மாற்றி அமைக்கக்கூடாது?' என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்கும்படி கலாசேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கலாசேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் கீழ் பாலியல் தொல்லையை தடுக்க விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலாசேத்ரா அறக்கட்டளை சார்பி்ல் அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணை குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். அத்துடன் இந்த உள் விசாரணை குழுவில் யார், யாரெல்லாம் உள்ளனர்? என்ற விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக உள்ள ஆசிரியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், பாலியல் தொல்லை தொடர்பாக பதிவான வழக்கை விசாரித்த போலீசாருக்கும், நீதிபதி கண்ணன் விசாரணை குழுவுக்கும் தடையாக எதுவும் கிடையாது. வழக்கை ஜூன் 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story