ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய பெருவிழா
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய 292-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று இரவு தொடங்கியது. நிகழ்ச்சியில், திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு மாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியைப் புனிதப்படுத்தி, ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தினந்தோறும் மாலை நேரங்களில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் பங்கு தந்தையர்களால் சிறப்பு திருப்பலியும், சிறிய சப்பரங்களில் அன்னையின் வீதியுலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் சிகர விழாவான தேர்பவனி வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மே மாதம் 1-ந் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏலாக்குறிச்சி பங்குத் தந்தை தங்கசாமி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.