வயதான தம்பதியை தாக்கி நகை பறிப்பு:2 கொள்ளையர்களுக்கு 10 ஆண்டு சிறை:தேனி கோர்ட்டு தீர்ப்பு
வயதான தம்பதியை தாக்கி நகைகளை பறித்த கொள்ளையர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வீடு புகுந்து கொள்ளை
சின்னமனூர்-சுங்காங்கல் சாலையில் சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 81). இவரது மனைவி வசந்தா (78). கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், வசந்தாவின் வீட்டின் முன்பு நின்று கொண்டு குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.
தண்ணீர் எடுத்து வருவதற்கு அவர் வீட்டுக்குள் சென்றார். அப்போது 2 பேரும் பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்று அவரையும், அவருடைய கணவரையும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த 7 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்களை தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்திவிட்டு கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
10 ஆண்டு சிறை
இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் வசந்தா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட எரசக்கநாயக்கனூர் இந்திரா காலனியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்ற கண்ணன் (36), மதுரை மாவட்டம் பாலமேடு முருகைய்யா நகரை சேர்ந்த கண்ணன் என்ற கருப்பு (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ராஜேஷ் கண்ணன் என்ற கண்ணன், கண்ணன் என்ற கருப்பு ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கொள்ளையர்கள் 2 பேரையும் போலீசார் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.