வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொலை
விழுப்புரம் அருகே வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
விழுப்புரம்
முடிதிருத்தும் தொழிலாளி
விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலுவு(வயது 80), இவருடைய மனைவி மணி(65). இவர்களுக்கு செல்வம், அய்யப்பன், முருகன் ஆகிய 3 மகன்களும், சாந்தி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணமாகி விட்டது.
இவர்களில் செல்வம், அய்யப்பன் ஆகியோர் வடலூரிலும், முருகன் காடாம்புலியூரிலும், சாந்தி கொள்ளுக்காரன்குட்டை கிராமத்திலும் வசித்து வருகின்றனர். இதனால் கலுவும், அவரது மனைவியும் பில்லூரில் ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கலுவு, வீட்டில் இருந்தவாறே முடி திருத்தும் தொழில் செய்து வந்தார்.
கணவன்-மனைவி மர்ம சாவு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கலுவு வீட்டின் கதவு பூட்டப்படாமல் லேசாக திறந்த நிலையில் இருந்தது. இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், அவர்களின் பெயரை குறிப்பிட்டு அழைத்தார். ஆனால் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு கலுவும், அவரது மனைவி மணியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் பார்சல் பிரியாணி பாதி சாப்பிட்ட நிலையில் இருந்தது. அருகில் குளிர்பான பாட்டிலும் கிடந்தது. கலுவுவின் வாயில் நுரைதள்ளியிருந்தது. ஆனால் அவரது உடலிலும், அவரது மனைவியின் உடலிலும் எந்தவொரு காயமும் இல்லை.
இதுதொடர்பாக அக்கம், பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கழுத்தை நெரித்து கொலை
பின்னர் கலுவு, மணி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் கணவன், மனைவி இருவரின் கழுத்தும் நெரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை யாரோ மர்ம நபர் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது உறுதியாகி உள்ளது.
பேரன் மீது சந்தேகம்
இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், கலுவு, மணி ஆகிய இருவரையும் பார்க்க அவர்களது பேரன் ஒருவர் அடிக்கடி பில்லூருக்கு வந்து சென்றதும், அவர்களின் பெயரில் உள்ள வீடு மற்றும் வீட்டு மனையை தனது பெயருக்கு எழுதி கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், நேற்று முன்தினம் மாலை அந்த பேரன், தாத்தா, பாட்டியை பார்க்க பில்லூர் வந்து சென்ற பின்னர்தான் இருவரும் இறந்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதனால் கலுவுவின் பேரன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை போலீசார் தேடியபோது அவர், ஊரில் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே தாத்தா-பாட்டியை அவர்களது பேரன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரபரப்பு
இதனிடையே இச்சம்பவம் குறித்து கலுவுவின் தம்பி ராசு, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்- மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பில்லூர் கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.