திண்டிவனம் அருகேஅரசு சொகுசு பஸ் மோதி முதியவர் சாவுமனைவிக்கு தீவிர சிகிச்சை


திண்டிவனம் அருகேஅரசு சொகுசு பஸ் மோதி முதியவர் சாவுமனைவிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே அரசு சொகுசு பஸ் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்


திண்டிவனம்,

புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம்(வயது 67). இவரது மனைவி அம்பிகா(57). இவர்கள் ஆடி அமாவாசையான நேற்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, ஒரு மொபட்டில் மேல்மலையனூருக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் புறப்பட்டனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் இவர்களது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் வந்தனர்.

சொகுசு பஸ் மோதியது

அப்போது, திண்டிவனம் அடுத்த தீவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, வெங்கடாசலம் மொபட்டை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், எதிரே உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தம்பதியினர் சென்றார்கள். இதற்காக அவர்கள் சாலையை நடந்து சென்று கடக்க முயன்றனர்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் இவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

தப்பி சென்ற டிரைவர்

விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர், பஸ்சை அங்கு நிறுத்திவிட்டு, அதில் இருந்து இறங்கி எதிரே நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் ஏறி தப்பி சென்றுவிட்டார். விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் வெங்கடாசலம் உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த அம்பிகா திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்துக்கு காரணம்?

இதற்கிடையே, நீண்ட நேரமாகியும் தனது பெற்றோர் வரவில்லையே என்று, அவரது மகள் தனது கணவருடன் இருவரையும் தேடி திரும்பி வந்தனர். தீவனூர் அருகே விபத்து நடந்த இடத்தில் வந்த போது, நடந்த சம்பவம் பற்றி அங்கிருந்தவர்கள் அவர்களிடம் கூறினர். இதை கேட்டதும், வெங்கடாசலத்தின் மகள் கதறி அழுதது, அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நேர்ந்த பகுதியில் உயர்மின்கோபுர விளக்கு ஒன்று உள்ளது. இந்த விளக்கு 6 மாத காலமாக எரியாமால் உள்ளது. இதனால், அந்த பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால், இந்த தம்பதியினர் சாலையை கடந்தது, பஸ் டிரைவருக்கு தெரியாமல் அவர்கள் மீது ஏற்றி இருப்பது தெரியவந்தது. எனவே மீண்டும் விபத்து நேராமல் தடுக்கும் வகையில், உயர்மின் கோபுர விளக்கை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story