மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி முதியவர் பலி
கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெட்டிக்கடைக்காரர்
கும்பகோணம் கே.கே. நீலமேகம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 64). இவர் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இவர் நேற்று காலை தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தனது கடைக்கு வியாபாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் நாகேஸ்வரன் வடக்கு வீதி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் மோதியது
அப்போது நாகேஸ்வரன் கோவில் சந்திப்பு பகுதியில் ஆறுமுகம் வந்து போது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
டிரைவர் கைது
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தவறான பாதையில் பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கிளியூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் விக்ரமாதித்தன் (36) என்பவரை கைது செய்தனர்.