யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதியவர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த ஆழங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 73). இவர் தான் யாசகமாக(பிச்சை) பெறும் பணத்தை கொரோனா நிவாரண நிதி மற்றும் இலங்கை தமிழர்களுக்கான நிவாரணம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ஆகியவற்றிற்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில் பூல்பாண்டியன், யாசகம் மூலமாக கிடைக்கப்பெற்ற ரூ.10 ஆயிரத்தை, ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து அந்த தொகையை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றார். அப்போது அவரிடம், வங்கி மூலமாக அரசு நிதியில் நேரடியாக செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார். இவருடைய இந்த சேவைப்பணியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.