சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் படுகாயம்
சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் படுகாயம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அன்பு நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 67). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தினகரன் நேற்று முன்தினம் இரவு மெழுகுவர்த்தி பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. மேலும் தினகரனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் படுகாயமடைந்த தினகரனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.