கரடி தாக்கி முதியவர் படுகாயம்


கரடி தாக்கி முதியவர் படுகாயம்
x

வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார். தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார். தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கரடி தாக்கியது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர்பாரளை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு சொந்தமான ஆனைமலை கிளப் அமைந்துள்ளது. இந்த கிளப்பில் பணியில் இருக்கும் பணியாளர்கள், உதவியாளர்கள் இரவில் பணி முடிந்து கிளப்பில் தங்கி விடுவார்கள். அதன்படி நேற்று பணியில் இருந்த சமையல் உதவியாளர்கள் பணி முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் கிளப்பின் அறைகளை தாழிடுவதற்காக சென்றனர்.

அங்குள்ள ஒரு அறையில் திறந்திருந்த ஜன்னல் வழியாக ஏற்கனவே உள்ளே நுழைந்து பதுங்கியிருந்த கரடி அவர்களை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றது. அப்போது குறுக்கே வந்த சமையல் உதவியாளர் சேவியர்(வயது 64) என்பவர் மீது பாய்ந்து கையை கடித்து தாக்கிவிட்டு தப்பி ஓடியது.

மேல் சிகிச்சை

இதில் சேவியரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் கிளப் நிர்வாகத்தினர் சேவியரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த வனச்சரகர் வெங்கடேஷ், சேவியருக்கு ஆறுதல் கூறி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் கணேசன் உத்தரவின்பேரில் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தவிர லோயர்பாரளை எஸ்டேட் பகுதியில் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு வன பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் இந்த மாதம் மட்டும் 3 பேரை கரடி தாக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story