காளை விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலி


காளை விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலி
x

காளை விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

போளூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

காளை விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே திண்டிவனம் ஊராட்சி களியம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று காளை விடும் விழா நடந்தது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. அந்த கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 65) என்பவர் தனது வீட்டில் இருந்து தடுப்பை தாண்டி நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக ஓடி வந்த மாடு அவரை முட்டியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அண்ணாதுரையின் மனைவி பச்சையம்மாள் போளூர் போலீசில் புகார் கொடுத்தார்.

3 பேர் மீது வழக்கு

அதில் அண்ணாதுரை மாடு முட்டி இறந்ததாகவும், அனுமதியின்றி காளை விடும் விழா நடத்திய அதே பகுதியை சேர்ந்த ராமர், சின்னபையன், ராஜேந்திரன் ஆகிய 3 பேர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அதன் பேரில் ராமர், சின்னபையன், ராஜேந்திரன் ஆகிய 3 பேர் மீது போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடு பரிதாப சாவு

மேலும் விழாவின் போது மாடுகளை வீதியில் அவிழ்த்து விட்டதும் அங்கிருந்த சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் மிரண்டு போன ஒரு மாடு வந்த வழியிலேயே மீண்டும் திரும்பி ஓடியது. அப்போது அந்த மாடும், எதிரே வந்து மாடும் நேருக்கு நேர் முட்டிக் கொண்டதில் ஒரு மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

அதுமட்டுமின்றி மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.


Related Tags :
Next Story