ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏமாற்றியதாக மகன் மீது கலெக்டரிடம் புகார் அளித்த மூதாட்டி


ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏமாற்றியதாக மகன் மீது கலெக்டரிடம் புகார் அளித்த மூதாட்டி
x

ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏமாற்றிய வாங்கி தன்னை தவிக்க விட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கதறி அழுதபடி கலெக்டரிடம் மனு அளித்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

கணவர் உயிரிழந்தார்

கலெக்டர் நேரில் சென்று மனு வாங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருவள்ளூர் ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி முனியம்மாள் (வயது 56). இவர்களுக்கு மகேஷ்பாபு என்ற மகனும் லோகேஸ்வரி, தேவிகா, விஜயலட்சுமி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 4 பேருக்கும் திருமணமாகி திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் மூதாட்டி முனியம்மாளுக்கு இடுப்பு பகுதி செயலிழந்து நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் முனியம்மாவின் கணவர் 2012 -ம் ஆண்டு உயிரிழந்தார்.

திருவள்ளூரில் இருந்து திருவாலங்காடு அடுத்த நாராயணபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்த முனியம்மாளை கவனிக்க ஆளில்லாததால் அவர் தனது மகள் ஒருவரிடம் தங்கி இருந்து வருகிறார்.

சொத்துகள் அபகரிப்பு

இதையடுத்து முனியம்மாளின் மகன் மகேஷ்பாபு தாயாரை ஏமாற்றி சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டு தாயாரை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னையும் தனது 3மகள்களையும் ஏமாற்றி அவரது பெயருக்கு மாற்றிய சொத்து பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என புகார் அளித்ததின் பேரில், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டதில் ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும் மேலும் மேல் நடவடிக்கைக்காக கலெக்டரை அணுகவும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மூதாட்டி முனியம்மாள் கலெக்டரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்துள்ளார்.

கலெக்டர் ஆறுதல்

மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கின் எதிரே கதறி அழுதபடி சுவற்றில் சாய்ந்தபடி படுத்து இருந்தவரை வெகு நேரம் கழித்து அதிகாரிகள் கலெக்டருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக வெளியே வந்து மூதாட்டியை பார்த்து அவர்களுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 11-ந் தேதி விசாரணைக்கு வரச் சொல்லியும் மேலும் மூதாட்டியின் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

மூதாட்டியுடன் வந்திருந்த அவரது 3 மகள்களும் கலெக்டரிடம் கண்கள் கலங்கி அழுத சம்பவம் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களை கலங்க வைத்தது.


Next Story