அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
மூதாட்டி
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் மெயின்ரோடு கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியபிள்ளை. இவருடைய மனைவி செண்பகவடிவு (வயது 84).
சுப்பிரமணியபிள்ளை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லாததால், செண்பகவடிவு அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வசித்து வந்தார்.
அரசுபஸ் மோதியது
செண்பகவடிவு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அருகில் உள்ள சுடலைமாடசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாகர்கோவிலில் இருந்து திருநெல் ேவலி நோக்கி சென்ற அரசு பஸ் செண்பகவடிவு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செண்பகவடிவு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செண்பகவடிவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவரான மண்டைக்காடு அருகே மணலிவிளையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (52) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.