தனியார் பள்ளி வேன் மோதி மூதாட்டி பலி


தனியார் பள்ளி வேன் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 13 July 2023 1:15 AM IST (Updated: 13 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டாமுத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மூதாட்டி பலி

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பஜனை கோவில் வீதியைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 98). இவர், நேற்று காலை தொண்டாமுத்தூர் யூனியன் ஆபீஸ் ரோட்டில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். மாதம்பட்டி-தொண்டாமுத்தூர் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே வந்த போது, தீத்திபாளையம் அருகே குப்பனூரில் செயல்படும் சி.எம்.சி. பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, கிழக்கு வீதியில் இருந்து, இடது புறமாக மாதம்பட்டி ரோட்டில் வேகமாக திரும்பியதாக தெரிகிறது. இதனால் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அங்கம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அங்கம்மாள் தலையின் மீது பள்ளி வேனின் பின்பக்க டயர் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி வேன் சிறைபிடிப்பு

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். மேலும் பள்ளி வாகனத்தை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பள்ளி வேனின் டிரைவர் வடிவேலம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (52) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளி வேன் மோதி மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story