வாலிபர் தாக்கியதில் மூதாட்டி சாவு-மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
வாலிபர் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி திடீரென உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி திடீரென உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூதாட்டியை தாக்கிய வாலிபர்
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ராதாம்மாள் (வயது 71). இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.
ராதாம்மாள் கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் இருந்தார். அவர் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்து திடீரென ராதாம்மாளை தாக்கினார். மேலும் அவரது மூக்குத்தியையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த வாலிபரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேடினர். ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை அருகே அந்த வாலிபரை பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து ராதாம்பாளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
வாலிபர் தப்பி ஓட்டம்
பின்னர் ஜெயக்குமார் தனது தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அப்போது போலீசில் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் அங்கு இல்லை. அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் புகார் மனுவை கொடுத்துவிட்டு ஜெயக்குமார் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் ராதாம்மாள் நேற்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மறியல் முயற்சி
தாக்குதல் நடத்திய நபரை போலீசார் விடுவித்ததாகவும், அந்த நபரை கைது செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.