உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கு தேர்தல்
திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 6 ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 6 ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.
உள்ளாட்சி காலி பதவியிடங்கள்
திருவாரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்தில் நெடுஞ்சேரி, கொரடாச்சேரி வட்டாரத்தில் பத்தூர், மன்னார்குடி வட்டாரத்தில் இடையூர் எம்பேத்தி, வலங்கைமான் வட்டாரத்தில் வடக்குப்பட்டம் ஆகிய 4 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதேபோல் குடவாசல் வட்டாரத்தில் மணவாளநல்லூர் வார்டு எண்.5, சீதக்கமங்கலம் வார்டு எண்.3, மன்னார்குடி வட்டாரத்தில் 54.நெம்மேலி வார்டு எண்.5, வடகோவனூர் வார்டு எண்.2, நீடாமங்கலம் வட்டாரத்தில் சித்தமல்லி மேல்பாதி வார்டு எண்.5, திருவாரூர் வட்டாரத்தில் கொட்டாரக்குடி வார்டு எண்.5, கோட்டூர் வட்டாரத்தில் நொச்சியூர் வார்டு எண்.4 ஆகிய 7 காலி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் வலங்கைமான் வடக்குப்பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் குடவாசல் மணவாளநல்லூர் வார்டு எண்.5, மன்னார்குடி 54 நெம்மேலி வார்டு எண்.5, நீடாமங்கலம் சித்தமல்லி மேல்பாதி வார்டு எண்.5 ஆகிய வார்டு உறுப்பினர்கள் உள்பட 4 பதவியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
வாக்குப்பதிவு
இதனையடுத்து குடவாசல் வட்டாரத்தில் நெடுஞ்சேரி, கொரடாச்சேரி வட்டாரத்தில் பத்தூர், மன்னார்குடி வட்டாரத்தில் இடையூர் எம்பேத்தி ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் குடவாசல் சீதக்கமங்கலம் வார்டு.3. மன்னார்குடி வடகோவனூர் வார்டு.2, திருவாரூர் கொட்டாரக்குடி வார்டு எண்.5 ஆகிய 3 வார்டு உறுப்பினர் பதவி என 6 பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதில் திருவாரூர் வட்டாரத்தில் கொட்டாரக்குடி வார்டு எண்.5 பதவிக்கான தேர்தல் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலவருமான புவனேஸ்வரி தலைமையில் வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியினை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.