தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்


தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
x

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகிறார்கள்

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும் அடங்குவார்கள். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது.

அதாவது, தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசனையும், உதவித் தேர்தல் அதிகாரியாக, சட்டசபை துணை செயலாளர் ரமேஷையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

பொது விடுமுறை நாளான 28-ந் தேதி, மற்றும் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களை தவிர்த்து, வரும் 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜூன் 1-ந்தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும்.

காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், இந்தத் தேர்தலில் போட்டி இருக்காது. கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தால், ஜூன் 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பலம் குறைந்து, தி.மு.க.வின் பலம் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில், அ.தி.மு.க.விடம் உள்ள 3 இடங்களில் ஒன்று தி.மு.க.வின் வசம் செல்கிறது. இதனால், தி.மு.க.வுக்கு 4 இடம் கிடைத்திருக்கிறது.

இந்தநிலையில், தி.மு.க. தன்னிடம் உள்ள 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த 15-ந்தேதியே தி.மு.க. வெளியிட்டது. அக்கட்சி வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, 3 இடங்கள் 2 ஆக குறைந்துள்ள நிலையில், அதை கைப்பற்றும் முயற்சியில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, இன்பதுரை உள்பட பலரும் வாய்ப்பு கேட்பதால், அ.தி.மு.க.வில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதில் போட்டா போட்டி நிலவுகிறது. அனேகமாக, இன்று (திங்கட்கிழமை) வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அதேநேரத்தில், மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் பதவிக்காலமும் தற்போது முடிவடைய இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு இடம் அவருக்கு கிடைக்குமா?, அல்லது தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரிக்கு வழங்கப்படுமா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். என்றாலும், யார் என்ற பெயர் அறிவிப்பு வெளியாக இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது.


Next Story