வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
x

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது

கரூர்

சிறப்பு முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளி, பசுதீஸ்வரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடந்தது.

17 வயது பூர்த்தியடைந்தவர்கள்

இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ம், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-ம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-ம் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பங்களை அளித்து முன்பதிவு செய்தனர்.

இன்றும் நடக்கிறது

மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 26, 27-ந்தேதிகளிலும் நடக்கிறது.

தோகைமலை

தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் நடைபெற்றது. இந்தமுகாமில் 20 ஊராட்சிகளில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் செய்தல் பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

நொய்யல்

சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலைஅண்ணாநகர்அரசு தொடக்கப்பள்ளி, நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் நடைபெற்றது. முகாமில்

பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம், மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்காக படிப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் இணைத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கினர்.


Next Story