வாகனம் மோதி மின்கம்பம் சேதம்
வாகனம் மோதி மின்கம்பம் சேதமானது.
சிவகாசி,
சிவகாசி பஸ் நிலையம் அருகில் இருந்து வெம்பக்கோட்டை முக்கு பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல லட்சம் செலவில் அலங்கார விளக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மிகவும் குறுகலான இந்த பகுதியில் அலங்கார விளக்கு அமைத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் சுட்டிக்காட்டிய பின்னரும் அந்த பகுதியில் அலங்கார விளக்குகளை வைக்க மாநகராட்சி அதிக ஆர்வம் காட்டி வருகிறது. நகரின் அழகுக்காக இந்த செயல் செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மின்கம்பம் பொருத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் போதிய இடவசதி இல்லாத நிலையில் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே மின்கம்பம் சேதம் அடைந்துள்ளதால் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் என்னென்ன விபத்துக்கள் நடக்குமோ? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.