வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த எலெக்ட்ரீசியன்
வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த எலெக்ட்ரீசியன்
கணபதி
கோவை கணபதி சித்தா தோட்டம் கிருஷ்ணராஜ் காலனியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி(வயது 48). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி நந்தினி(35). இவர்களுக்கு அஸ்வித்(12), அஸ்வந்த்(10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இந்தநிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், நந்தினி தனது மகன்களுடன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆசைத்தம்பி தனியாக வசித்து வந்தார்.
இதையடுத்து நேற்று நந்தினி தனது கணவர் ஆசைத்தம்பியை செல்போனில் அழைத்தார். பலமுைற முயற்சித்தும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நந்தினி, பக்கத்து வீட்டுக்காரரான செந்தில்குமார் என்பவருக்கு தகவல் கொடுத்து, ஆசைத்தம்பியை வீட்டுக்கு சென்று பார்த்து வர சொன்னார். அவர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஆசைத்தம்பி மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, ஆசைத்தம்பி இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.