எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
ராஜாக்கமங்கலம்:
தக்கலை அருகே உள்ள மணலி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர். இவருடைய மகன் ஆல்வின் (வயது31), எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவியும், 1½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆல்வின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிச்சந்தை அருகே உள்ள வேம்பனூர் பரப்புவிளை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார். அப்போது, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆல்வினின் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தையுடன் வாவறையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், ஆல்வின் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் ஆல்வின் மணலியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். மறுநாள் இரவு பரப்புவிளையில் உள்ள ஆல்வினின் வீட்டில் விளக்குகள் எரியாமல் இருந்தது.
இதைகண்ட பக்கத்து வீட்டுக்காரர் அங்கு சென்றபோது, கதவு சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ஆல்வின் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இதுபற்றி மணலியில் உள்ள தந்தை சின்னப்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தெடர்ந்து சின்னப்பர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆல்வினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.