முதன் முறையாக மின்சாரம், குடிநீர் வசதி


முதன் முறையாக மின்சாரம், குடிநீர் வசதி
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

குரங்குமேடு கிராமத்துக்கு 25 ஆண்டுகளில் முதன் முறையாக மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

குரங்குமேடு கிராமத்துக்கு 25 ஆண்டுகளில் முதன் முறையாக மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழங்குடியின கிராமம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வனப்பகுதியையொட்டி இயற்கை எழில் சூழ குரங்குமேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியினமான குரும்பர் இனத்தை சேர்ந்த 6 குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தேயிலை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதானமாக செய்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால், குரங்குேமடு கிராமத்தில் மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தினமும் பயன்படுத்தும் தண்ணீருக்கு கூட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தலைச்சுமையாக குடங்களில் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீடுகளை விட்டு வெளியே வருவது இல்லை என்று கூறப்படுகிறது.

மின் வசதி

நடைபாதை வசதி கூட இல்லாததால், கரடு-முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் குரங்குமேடு கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பே மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அந்த பணியில் தொய்வு ஏற்பட்டு இருந்தது.

குடிநீர் குழாய்

எனினும் தற்போது வனப்பகுதி வழியாக மின்கம்பங்கள் அமைத்து, குரங்குமேடு கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் குழாய் அமைத்து குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கிடைத்து உள்ளதால், பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் வனவிலங்குகள் தொல்லை அதிகம். மின் வசதி இல்லாததால், மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரமாட்டோம். தற்போது மின் வசதி கிடைத்துள்ளது. மேலும் குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு காரணமான நீலகிரி மாவட்ட கலெக்டருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி என்றனர்.


Next Story