மின்கட்டணம், சொத்துவரியை உயர்த்தியதுதான் மக்களுக்கு தி.மு.க. அரசு வழங்கிய போனஸ்


மின்கட்டணம், சொத்துவரியை உயர்த்தியது தான் மக்களுக்கு தி.மு.க. அரசு வழங்கிய போனஸ் என்று சிவகாசியில் நேற்று நடந்த அ.தி.மு.க.. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விருதுநகர்

சிவகாசி,

மின்கட்டணம், சொத்துவரியை உயர்த்தியது தான் மக்களுக்கு தி.மு.க. அரசு வழங்கிய போனஸ் என்று சிவகாசியில் நேற்று நடந்த அ.தி.மு.க.. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார் காலனியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-

தமிழ்நாடே வியக்கும் அளவு ஒரு மாநாடு போல் இந்த பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்துள்ளீர்கள். விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை சாதனையாக மாற்றி காட்டுபவர், கே.டி.ராஜேந்திரபாலாஜி.

மருத்துவகல்லூரி

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய இந்த கூட்டம்தான் சாட்சி. தமிழகத்தை அதிகப்படியான நாட்கள் ஆண்ட பெருமை அ.தி.மு.க.வுக்கு உண்டு. அதனால்தான் தமிழகம் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை இடத்திற்கு வர அடித்தளமிட்டது, அ.தி.மு.க.தான்.

திராவிட மாடலை உருவாக்கியதே அ.தி.மு.க.தான். 16 மாத தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் என்ன நடக்கிறது? அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே வருடத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். இந்த மாவட்டத்துக்கு மருத்துவ கல்லூரி வேண்டும் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி என்னிடம் கேட்டார். அப்போது தமிழகத்துக்கு புதிதாக வரும் முதல் மருத்துவகல்லூரி விருதுநகர் மாவட்டத்துக்குத்தான் என்று உறுதி அளித்திருந்தேன். அதன்படி விருதுநகரில் மருத்துவகல்லூரி கட்டி முடிக்கப்பட்டது.

52 லட்சம் மடிக்கணினிகள்

இதே போல் 7 இடங்களில் சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 76 இடங்களில் கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. பல ஆயிரம் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டன. கல்வியில் சிறந்து விளங்கும் நாடுதான் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும். எனவே அ.தி.மு.க. அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விலையில்லாமல் வழங்கினோம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வழங்காத மடிக்கணினியை தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கியது. இந்த எல்லா திட்டங்களும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டு உள்ளன.

நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?

ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து மக்கள் நல திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியது. தேர்தல் பிரசாரத்தின் போது, மு.க.ஸ்டா லின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பிரசாரம் செய்தனர். ஆனால் நீட் தேர்வு இன்னும் ரத்து செய்யப்படவில்லை. அதே நேரத்தில் தி.மு.க. அமைச்சர் ஒருவர், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுங்கள் என்று கூறுகிறார்.

கடந்த 2010-ல் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்று இருந்த நேரத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதை அப்போதே ஜெயலலிதா எதிர்த்தார். இன்று வரை அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் நீங்கள் ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை?

மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தேர்தலுக்கு முன்னர் ஒரு பேச்சும், தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சும் பேசுகிறார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ஆண்டுதோறும் 450 ஏழை மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் ேசர்ந்து படித்து வருகிறார்கள். 110 பேர் பல் மருத்துவம் படிக்கிறார்கள்.

விஷ காய்ச்சல்

16 மாத தி.மு.க. ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்ன செய்துள்ளார்? தமிழகத்தில் 2000 இடங்களில் செயல்பட்டு வந்த அம்மா கிளினிக்கை தி.மு.க. அரசு மூடியது. இப்போது தமிழகம் முழுவதும் விஷ காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க முடியாமல் தி.மு.க. அரசு திணறி வருகிறது.

தை மாதம் வருகிறது என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பொங்கல் தொகுப்புதான். கடந்த பொங்கலுக்கு கொடுத்த தொகுப்பில் பல்லி இருந்தது. தரமற்ற பொருட்களை கொடுத்து அந்த திட்டத்தில் கூட தி.மு.க. அரசு ஊழல் செய்தது.

கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் இதுதான் தி.மு.க.வின் தாரகமந்திரம். பட்டாசு தொழில் நசிந்து போகாமல் இருக்க அ.தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. சுப்ரீம் ேகார்ட்டில் மூத்த வக்கீல்களை நியமித்து பட்டாசு தொடர்பான வழக்கில் வாதாடினோம். ஆனால் தற்போது அந்த தொழிலுக்கு வந்த பாதிப்பை தி.மு.க. அரசு தடுக்கவில்லை.

வரம்பு மீறி...

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு ராஜேந்திரபாலாஜி கடுமையாக உழைத்தார். அவர் கேட்ட அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்தேன். தி.மு.க. அமைச்சர்கள் வரம்புமீறி பேசுகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தி.மு.க.வினர் செயலுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

யார் வேண்டும்-யார் வேண்டாம்? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க. சாதி, மதம் பார்க்காது. யாரையும் புண்படுத்தி பேசாது. மக்கள் மனம் புண்படும்படி யாராவது பேசினால் அதற்கு முதல் எதிர்ப்பு குரலை அ.தி.மு.க. கொடுக்கும்.

முடக்க முடியாது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருகிறது. திறமை இல்லாத அரசாங்கம் நடக்கிறது. போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தங்களது சொத்துக்களை இழந்து தவித்து வருகிறார்கள். இதை தடை செய்ய வேண்டும் என்று பல முறை கூறி உள்ளோம். இப்போதுதான் அதற்கு ஒரு முடிவு வந்துள்ளது. அதுவும் அறிவிப்போடு முடிந்துவிடுமா? அல்லது ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். தொண்டர்கள்தான் அ.தி.மு.க.வின் தலைவர். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை முடக்க முடியாது. உண்மையாக உழைத்தால் அ.தி.மு.க. வில் பதவிக்கு வரலாம்.

மக்களுக்கு வழங்கிய போனஸ்

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என 2 போனஸ்களை, மக்களுக்கு தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. மின்சாரத்தை தொட்டால் 'ஷாக்' அடிக்கும் காலம் போய் மின்கட்டணத்தை கேட்டாலே 'ஷாக்' அடிக்கும் காலம் வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மும்முனை மின்சாரம் தடை இல்லாமல் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும்? என்றே தெரியவில்லை.

தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்த திட்டத்தையும் தி.மு.க. செயல்படுத்தவில்லை. விதவைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை கூட இந்த அரசு நிறுத்திவிட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மாநில அரசு என்ன செய்யப்போகிறது? இந்த அரசு படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையும் ஏமாற்றி வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த விருதுநகர் மாவட்ட மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story