ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது
வெம்பாக்கத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வெம்பாக்கத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மின்கம்பி பாதையை மாற்ற...
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சக்திவேல். இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் சில மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.
புதிதாக கட்டி வரும் வீட்டின் மேல்பகுதி வழியாக மின் கம்பி செல்கிறது. அதனால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கட்டிடப் பணியை நிறுத்தி வைத்துள்ளார். வீட்டின் மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி பாதையை மாற்றி அமைப்பதற்காக வெம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் அஜித்பிரசாத் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
ரூ.50 ஆயிரம் கொடுத்தார்
பின்னர் மின்கம்பியை மாற்றி அமைப்பதற்கான படிவங்கள் மற்றும் திட்ட மதிப்பீடு கட்டணம் ரூ.50 ஆயிரத்தை கடந்த மார்ச் மாதம் சக்திவேல், உதவி பொறியாளரிடம் கொடுத்து உள்ளார். இந்த பணத்திற்கு அவர் ரசீது ஏதும் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த 17-ந் தேதி திட்ட மதிப்பீடு ரூ.37 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று உதவி பொறியாளர் அஜித்பிரசாத் கூறிஉள்ளார். அதற்கு அவர் மொத்த பணமும் உங்களிடம் தானே உள்ளது என்று தெரிவித்துள்ளார். உடனே உதவிப் பொறியாளர் அஜித்பிரசாத் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று தனது கணக்கில் வைத்திருந்த ரூ.39 ஆயிரத்தை எடுத்து கொடுத்துள்ளார். அதை சக்திவேல் மின்வாரியம் பெயரில் 18-ந் தேதி டி.டி.யாக எடுத்துக் கொடுத்துள்ளார்.
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி உதவிப் பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் 10 பேர், சக்திவேல் வீடுகட்டிவரும் இடத்திற்கு இரண்டு கம்பங்களை கொண்டு சென்று இறக்கி வைத்த நிலையில், மீண்டும் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சக்திவேல் ஏற்கனவே நான் கொடுத்த பணத்தில் மீதி பணம் ரூ.11 ஆயிரம் உள்ளது என கூறியுள்ளார்.
அதற்கு உதவிப் பொறியாளர் எனக்கும், மேல் அதிகாரிக்கும் பணம் வேண்டும் என்றும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் மற்ற வேலைகளை செய்ய முடியும் என்றும் கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த சக்திவேல், உதவிப் பொறியாளர் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
உதவி பொறியாளர் கைது
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சக்திவேலிடம்கொடுத்து, அதை உதவி பொறியாளர் அஜித்பிரசாத்திடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி அவரிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவிப்பொறியாளர் அஜித் பிரசாத்தை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.