விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது


விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
x

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயசு 50). இவர் தனது விவசாய தோட்டத்திற்கு புதியதாக இலவச மின் இணைப்பு கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொசூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பதிவு செய்து இருந்தார். தற்போது தங்கராசுவின் விவசாய தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தில் இருந்து அழைப்பு கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தை தங்கராசு எடுத்துக்கொண்டு கொசூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு வந்து விவரம் கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த போர்மேன் கரூரை சேர்ந்த சேகர் என்பவர், தங்கராசுவிடம் இலவச மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கராசு இதுகுறித்து கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி நேற்று ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை தங்கராசு, பணியில் இருந்த சேகரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் சேகரை கையும், களமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story