முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி மின்சார வாரிய பணியாளர்கள் பேரணி


முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி மின்சார வாரிய பணியாளர்கள் பேரணி
x

முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி மின்சார வாரிய பணியாளர்கள் நடத்திய பேரணியால் சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்தது.

சென்னை

முத்தரப்பு ஒப்பந்தம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் இருந்து கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்லும் போராட்டத்தை நேற்று நடத்துவதாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்து இருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மின்சார வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் கார், வேன், பஸ்களில் அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர்.

பின்னர் ஊர்வலமாக ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த சாமியானா பந்தலுக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பேசினர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர்கள் யூனியன் தலைவர் கோவிந்தராஜன் கூறியதாவது:-

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுடைய பல கோரிக்கைகளின் மீது வாரிய நிர்வாகம் பலமுறை அழைத்து பேசி முடிவு பெறாமல் இருக்கிறது. மின்சார வாரிய பணியாளர்கள் மத்தியில் தமிழக அரசுக்கு அவப்பெயர் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும். 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பி பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.

இதற்காக நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் என்ற வெளியாட்களை தேர்வு செய்யும் முறைக்கு விடக்கூடாது. அத்துடன் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை பறிக்க வேண்டாம். அரசாணை 100-ன்படி அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் மின்சார வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். மின்சார வாரிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தொழிற்சங்க பிரதிநிதிகள் 5 பேர் அடங்கிய குழுவினர் சென்னை கோட்டைக்கு சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. போராட்டத்தில் மத்திய கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சேவியர், எச்.எம்.எஸ். தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மின்சார வாரிய ஊழியர்கள் பஸ்கள், கார்கள், வேன்களில் சென்னைக்கு நேற்று வந்தனர். இதனால் காலை நேரத்தில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா.பெரியார் சாலைகளில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

குறிப்பாக, எழும்பூரில் உள்ள ருக்மணி லட்சுமிபதி சாலை, கூவம் சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.


Next Story