பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை விற்கும் நிலைமைக்கு மின்சார வாரியம் வளர்ந்துள்ளது -அமைச்சர் பேட்டி


பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை விற்கும் நிலைமைக்கு மின்சார வாரியம் வளர்ந்துள்ளது -அமைச்சர் பேட்டி
x

தமிழகத்தில் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கும் நிலைமைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வளர்ந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மறைமலைநகர்,

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மின்வாரிய அலுவலர்களுடனான சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வரவேற்பு உரை ஆற்றினார். தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானம் இயக்குனர் சிவலிங்க ராஜன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சீபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடும் நடவடிக்கை

சிறப்பு அழைப்பாளராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

இந்த கூட்டம் முடிந்த உடன் அதிகாரிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்திக்க வேண்டும். இன்னும் என்னென்ன கோரிக்கைகள் உள்ளதோ அதற்கு உடனடியாக தீர்வை காண வேண்டும். நீங்கள் இந்த பணிகளை செய்யவில்லை என்றால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளன. இதனால் கூடுதல் மின் தேவை இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார வாரியம் வளர்ச்சி

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் மின் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.397 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 26 லட்சம் யூனிட் தமிழகத்தில் உபரியாக இருக்கக்கூடிய மின்சாரம் வெளி மாநிலத்திற்கு 9 ரூபாய் 76 பைசாவிற்கு விற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உபரியாக இருக்கக்கூடிய மின்சாரத்தை வேறு மாநிலத்திற்கு வழங்கக்கூடிய அளவில் தமிழ்நாடு மின்சார வாரியம் வளர்ந்து உள்ளது. மின்சார வாரியத்தில் உள்ள முக்கியமான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டாஸ்மாக் கடையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என சமூக வலைதளங்களில் வெளியான கருத்துகள் குறித்து செய்தியாளர் கேட்டபோது அதுபோன்ற உத்தரவுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.


Next Story